தண்ணீர் தொட்டியில் தத்தளித்த மகன்.. பதறிய தாயுடன் 3 பேர் பலியான சோகம்!
Author: Hariharasudhan3 February 2025, 6:04 pm
நாமக்கல்லில், தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு மகன்களைக் காப்பாற்ற முயன்ற தாயும் சேர்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்: நாமக்கல் அடுத்த போதுப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவருக்கு யாத்விக் (3) மற்றும் 11 மாத குழந்தையான நிதின் ஆதித்யா ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், இன்று நிலத்தடி நீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் இந்துமதி தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்துள்ளார்.
மேலும், தண்ணீர் நிரம்பினால் தெரிந்து கொள்வதற்காக, அந்தத் தொட்டியை மூடாமல் மற்ற வேலைகளைப் பார்த்து வந்துள்ளார். அப்போது, அந்த தொட்டியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 11 மாதக் குழந்தையான நிதின் ஆதித்யா, தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த யாத்விக், தனது தம்பியின் கையைப் பிடித்து மேலே இழுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அவரும் உள்ளே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், தொட்டிக்குள் தனது இரண்டு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், சற்றும் யோசிக்காமல் அவரும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் குதித்துள்ளார். ஆனால், தண்ணீர் தொட்டியில் நீர் நிரம்பியதால், தாய், இரு மகன்கள் என மூன்று பேரும் மூச்சுத்திணறி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்போனால் அலறித் துடித்த முதியவர்.. ஒரே செயலில் சிதறியது எப்படி?
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.