மூன்று மைனர் மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்! கன்னியாகுமரி அருகே கொடூரம்!!

28 September 2020, 4:37 pm
Kanya Prostitution- updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தக்கலையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் காவல் ஆய்வாளரின் கணவர் உட்பட மூன்று பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியூரை சேர்ந்த ஆண்களும் பெண்களும் வந்து செல்வதாகவும் இங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று மாலை தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரண்டு தனித்தனி அறைகளில் சிறுமிகளுடன் இருந்த ஆண்கள் இரண்டு பேர் அரை நிர்வாணத்தில் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஒருவர் வீரவ நல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவரான குளச்சல் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் என்பதும் மற்றொருவர் தக்கலை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுனில் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து அந்த சிறுமிகள் மற்றும் பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் மார்தாண்டம் பகுதியை சேர்ந்த லதா என்பதும் அவர் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் வாடகை வீடு எடுத்து தனது கல்லூரி மற்றும் 12-ம் வகுப்பு 10-வகுப்பு படிக்கும் மூன்று மகள்களையும் இளைய மகளின் பள்ளி தோழியான மற்றொரு சிறுமியையும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது தெரிய வந்தது.

இதனையடுத்து நான்கு சிறுமிகளையும் மீட்ட போலீசார் அவர்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் பள்ளி செல்லும் பெற்ற குழந்தைகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் லதா, பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன் மற்றும் கூலி தொழிலாளி சுனில்-ஐ யும் கைது செய்தனர்.

இது குறித்து தக்கலை டி.எஸ்.பி யிடம் விளக்கம் கேட்ட போது தற்போது சிறுமிகள் நான்கு பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் பரிசோதனை அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியிலான தொடர்பில் இருந்த பல ஆண்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் விளக்கமளித்தார்.

இந்த பின்னணியில் பல முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. புத்தகம் ஏந்தி பள்ளி செல்லும் சிறுமிகளை தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0