ஆட்டோ ஓட்டி மகளை லண்டன் அனுப்பிய வைராக்கிய தாய்: மகளிர் தினத்தில் வழங்கப்பட்ட கௌரவம்!!

Author: Rajesh
9 March 2022, 11:24 am
Quick Share

ஆண்கள் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து குடும்பத்தைக் கரையேற்றி வந்த காலகட்டத்தை கடந்து தற்போது பெண்களும் ஆட்டோ ஓட்டும் பணியில் இறங்கியுள்ளனர். காலத்தின் கட்டாயத்தில் ஓட்டுநர் வேலைக்கு பெண்கள் வந்தாலும், அதிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி குடும்ப சூழல் காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னமே ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தவர். வறுமையிலும் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த பாக்கியலட்சுமி தனது மகள்கள் இருவரையும் பட்டதாரிகளாக மாற்றியுள்ளார்.

அன்னையின் விடா முயற்சியையும், மகள்களை கரைசேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் பார்த்த இவரது மகள்கள் படிப்பை கெட்டியாகப் பிடித்து கரையேறியுள்ளனர். இதில் ஒருவர் லண்டனுக்கு சென்று படித்தும் முடித்துள்ளார். அன்பான இந்த அன்னைக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒரு அங்கீகாரம் வழங்கியுள்ளது கோவை அரசு கலைக்கல்லூரி.

மகளிர் தினத்தன்று இந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பாக்கியலட்சுமியின் விடா முயற்சியைப் பாராட்டி கோவை கொற்றவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாக்கியலட்சுமி தனது மகள்களை கரையேற்ற உழைத்தது குறித்தும் காணொலி ஒளிபரப்பப்பட்டது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

25 ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டுநராக வந்தபோது தன்னை அறுவறுப்பாகப் பார்த்த சமூகம், தற்போது விருது வழங்கி கவுரவிப்பதை எண்ணி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கிறார் பாக்கியலட்சுமி

தாய்க்கு மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று வசனங்கள் வெறும் வசனங்களாக இருப்பதில்லை என்பதை பாக்கியலட்சுமி போன்ற அன்புத்தாய்மார்கள் அனுதினமும் உணர்த்தி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Views: - 687

0

0