7 வயது சிறுமியை ரூ.10 லட்சத்திற்கு விற்றத் தாய் : போராடி மீட்ட பாட்டி!!

13 April 2021, 4:54 pm
child Sales -Updatenews360
Quick Share

சேலம் : தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட சிறுமியை பாட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள்கோயில்மேடு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சதீஷ். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும், 6 வயது மகனும் உள்ளனர்.

சுமதி சேலம் முல்லைநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன்(வயது 52) என்பவரின் வீட்டில் வீட்டுவேலை செய்து வந்துள்ளார். கிருஷ்ணன் அப்பகுதியில் ரோட்டரி சங்கத்தின் செயலாளராக உள்ளார்.

வீட்டு வேலைக்கு செல்லும்போது சுமதி தனது பிள்ளைகளையும் அழைத்து செல்வார். அப்படி சென்றபோது கடந்த சில நாட்களுக்கு முன் தனது 7 வயது பெண்குழந்தையை கிருஷ்ணன் வீட்டிலேயே விட்டுவிட்டார்.

குழந்தையை பார்க்க வந்த சுமதியின் தாய் சின்னபொண்ணுக்கு குழந்தையை காட்ட மறுத்துவிட்டதால், சின்னபொண்ணு சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், 7 வயதுடைய எனது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமியை அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார். மேலும் அவர் பேத்தியை என்னிடம் காண்பிக்க மறுத்து வருகிறார். எனவே அவரை அழைத்து விசாரிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை நடத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே அந்த சிறுமியின் தாய், உறவுக்கார பெண் ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த உரையாடலில் சிறுமியின் தாய் பேசும்போது, என்னுடைய குழந்தையும், நானும் நன்றாக இருக்க வேண்டும், இதற்காக தொழில் அதிபர் ரூ.10 லட்சம் கொடுத்தார். இந்த பணத்தை வாங்கி நான் வங்கியில் போட்டு உள்ளேன். ஒரு வீட்டை கட்டிவிட்டு அங்கு சென்று விடுவேன். என்னுடைய குழந்தையை நான் கூட பார்க்க முடியாது, என கூறுகிறார். யாராவது பிரச்சினை செய்தால் குழந்தையை சென்னைக்கு அழைத்து சென்றுவிடுவார்கள். பின்னர் குழந்தையை பார்க்ககூட முடியாது என்றுள்ளார். அதற்கு அந்த உறவுக்கார பெண் கூறுகையில், உனக்கு மனசாட்சியே இல்லையா?, இவ்வளவு சீப்பா நடந்துள்ளாயே, உன்னிடம் பேசுவதே வேஸ்ட், எனக் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

இந்த ஆடியோ குறித்து சேலம் டவுன் மகளிர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மீட்கப்பட்ட குழந்தையை தாயிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், தன்னிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று குழந்தையின் பாட்டி சின்னபொண்ணு கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலதிபரிடமே குழந்தையை ஒப்படைக்க முயற்சிகள் நடைபெற்றுவருவதாகவும் சின்னப்பொண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 92

0

0