மாநகராட்சி இளநிலை உதவியாளரின் கல்வித்தகுதியில் மாற்றம் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கூட்டமைப்பினர் நன்றி..!

26 August 2020, 6:03 pm
typist - updatenews360
Quick Share

சென்னை : மாநகராட்சி இளநிலை உதவியாளர்களின் கல்வித் தகுதியில் இருந்து தட்டச்சுவிற்கு விலக்களித்து அரசு ஆணை பிறப்பித்த நிலையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு த.நா.மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகின்ற இளநிலை உதவியாளர்களின் கல்வித்தகுதி SSLC என்று உள்ளது. ஆனால், மாநகராட்சிகளில் பணியாற்றி வருகின்ற இளநிலை உதவியாளர்காளின் கல்வித் தகுதியில் மட்டும், +2 மற்றும் தட்டச்சு தேர்ச்சி என்று இருந்து வந்தது. இதனை மாற்றம் செய்யக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.

நகராட்சி நிர்வாக ஆணையாளராக முனைவர்.க.பாஸ்கரன் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக, கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதியன்று தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இதனை அடிப்படையாக கொண்டு நகராட்சி நிர்வாக ஆணையர் க.பாஸ்கரன், தனது கடிதம் எண் நக 7885/2019/ MCS-1 நாள் 20-11-2019 ன் படி பரிந்துரை செய்ததின் அடிப்படையில், அரசு மாநகராட்சி இளநிலை உதவியாளர்காளின் கல்வித்தகுதி SSLC மட்டும் என்ற வகையில் 1996ம் வருடத்திய பணிவிதியினை திருத்தி அரசாணை 87 MAWS நாள்19-8-2020 ஐப் பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணைக்கு தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், “இது நமது நெடு நாளைய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனால் இனி அடிப்படை பணியாளர்கள் இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு பெற முடியும். கருணை அடிப்படை பணி நியமனமாக இளநிலை உதவியாளர்களாக பணியிடம் பெறமுடியும். இந்த அரசானை மாநகராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பிரிவினருக்கும் (கருணை அடிப்படை பணி நியமனம்) பயன் அளிக்கும் அரசாணையாகும்,” எனத் தெரிவித்தார்.

மேலும், 12 ஆண்டுகளாக எங்களது கோரிக்கைக்கு கடந்த ஆட்சியாளர்கள் செவி சாய்க்காத நிலையில், தாங்கள் மனு அளித்த உடனே, அதனை கவனத்தில் எடுத்து, நிறைவேற்றிக் கொடுக்க உறுதுணையாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.

Views: - 38

0

0