சீர்காழியில் தீரன் பட பாணியில் நடந்த கொலை, கொள்ளை : 4 மணி நேரத்தில் நடந்த என்கவுண்டர்!!

27 January 2021, 11:48 am
Sirkazhi Murder - Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் மனைவி மற்றும மகனை கொலை செய்து 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பலில் ஒருவனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் (வயது 50). அவர் சீர்காழி அடுத்த தர்மபுரம் பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். மேலும் தங்கம் வெள்ளி நகை மொத்த வியாபாரத்தையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இவரது வீட்டில் இன்று காலை ஆறு மணி அளவில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கதவை தட்டி ஹிந்தியில் பேசியுள்ளனர். கதவை திறந்தவுடன் தள்ளிவிட்டு உள்ளே சென்ற வடமாநிலத்தவர்கள் தன்ராஜ் மனைவி ஆஷா (வயது 45),மகன் அகில் (வயது 24) ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.

தன்ராஜ் மற்றும் மருமகள் நெக்கல், இருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து வீட்டின் படுக்கை கட்டில் அடியில் வைத்திருந்த 16 கிலோ தங்க நகைகள் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தன்ராஜின் காரை திருடிக் கொண்டு ஐந்து பேரும் தப்பி சென்றனர்.

இதையடுத்து, போலீசார் நடத்தி விசாரணையில் 5 பேர் கொண்ட வடமாநில கும்பல் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் எருக்கூர் கிராம வயல்பகுதியல் பதுங்கியிருப்பதாக தகவல் அறிந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது வயல் வெளியில் இருந்து கொள்ளையன் தப்பியோட முயன்றபோது போலீசாரை தாக்க முயற்சித்துள்ளார். உடனே கொள்ளையனை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்றனர். மேலும் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார். 16 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய கொலை கொள்ளை சம்பவத்தில் போலீசார் என்கவுண்டர் செய்துள்ள சம்பவம் வரவேற்பை பெற்று வருகிறது.

Views: - 0

0

0