வீதியில் நடந்த தகராறை விலக்கி விட சென்றவர் கொலை : இளைஞர்கள் இரண்டு பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 9:05 pm
Murder - Updatenews360
Quick Share

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஊழியர்
விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் மகன் இப்ராஹீம் (வயது 45).

இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இவர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை நோன்பு கஞ்சிக்காக பொருட்களை வாங்குவதற்காக இப்ராஹீம், தான் வேலை பார்க்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் 2 வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்ததோடு அவரை திட்டி தாக்கினர்.

இதைப்பார்த்த இப்ராஹீம், அந்த வாலிபர்களிடம் சென்று ஏன் வீண் தகராறு செய்து பெண்ணை தாக்குகிறீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் இருவரும், இப்ராஹீமை தாக்கியதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால், அவரது வயிற்றில் குத்தினர்.

இதில் ரத்தம் சொட்ட, சொட்ட இப்ராஹீம் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

அவர்களை அங்கிருந்த கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்தனர். பின்னர் இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்ராஹீமை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இப்ராஹீம் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து பிடிபட்ட 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (23) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து சகோதரர்கள் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஞானசேகரனுக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இதையறிந்த அவரது மகன்கள் ராஜசேகர், வல்லரசு இருவரும் அந்த பெண்ணையும், தனது தந்தையையும் கண்டித்து வந்துள்ளனர். இந்த சூழலில் மாலை அந்த பெண்ணை, பெரியகாலனி பகுதியில் ராஜசேகரும், வல்லரசுவும் பார்த்தனர்.
உடனே அவர்கள் இருவரும், அப்பெண்ணிடம் தகராறு செய்தனர்.
மேலும் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதோடு அவரை தாக்கினர்.

உடனே அந்த பெண், அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அந்த பெண்ணை இருவரும் பின்தொடர்ந்து துரத்திச்சென்றனர்.

அப்பெண், விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் சென்று பதுங்கிக்கொண்டார். இதைப்பார்த்த அவர்கள் இருவரும் அந்த பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து அப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அந்த சமயத்தில் அங்கிருந்த இப்ராஹீம் விரைந்து சென்று அந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் இப்ராஹீமை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இருவரும் சேர்ந்து போதையில் கண்ணில் பட்ட கடையெல்லாம் அடித்து நொறுக்கியதோடு ஒரு சில்லறை கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டப்பகலில் பல்பொருள் அங்காடி ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 272

0

0