எச்சரிக்கை மக்களே.. வயதானவர்களை குறி வைக்கும் மர்மகும்பல் : கோவையில் அடுத்தடுத்து முதியவர்களை தாக்கி நகை, பணம் கொள்ளை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 4:36 pm
Murder and Theft - Updatenews360
Quick Share

கோவை : சூலூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை சம்பவம் அரங்கேறிய நிலையில் அடுத்தடுத்து முதியவர்களை குறி வைத்து திருடும் கும்பலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சூலூர் அருகே பள்ள பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (வயது 82). கடந்த 4-ந் தேதி இவரை மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சரோஜினியின் வாய், கை, கால்களை பேக்கிங் டேப்பால் ஒட்டி கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு ள்ளனர். சரோஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர். இதனால் போலீசார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

இதற்காக அவர்களது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்று போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். கொலை செய்யப்பட்ட பகுதிக்கு அருகில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லா ததால் கொலையாளியை அடையாளம் காண போலீசார் மிகவும் சிரமமான சூழ்நிலையில் திணறி வருகின்றனர்.

இதில் பழைய குற்றவாளிகள் யாரேனும் உள்ளனரா என விசாரித்து வருகின்றனர். சரோஜினி கொல்லப்பட்ட அதே நாளில் கோவை ஆர்.எஸ். புரத்தில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர், முதியவரை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். முதியவரை கட்டிப் போட்ட நபரும் பேக்கிங் டேப் பயன்படுத்தி இருந்தார்.

முதியவரின் வாயை டேப் கொண்டு கட்டியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணம்பாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியை இரு மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியின் வாயை பொத்தி கட்டி போட முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அந்த மூதாட்டி தைரியமாக திருடர்களை எட்டி உதைத்ததில் ஒரு திருடன் கீழே விழுந்தவுடன் பயந்து போய் இருவரும் அப்பகுதியை விட்டு தப்பி ஓடி விட்டனர். மூதாட்டியிடம் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் இந்த சம்பவம் பற்றி புகார் தரப்படவில்லை.

இதனால் முதியவர்களை குறி வைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் கோவையில் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. சரோஜினி கொலை உள்ளிட்ட அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பலைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

இந்த கும்பலுடன் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முதியவர்களை அந்த பெண் முதலில் சந்தித்து பேசுவது, அதன்பிறகு மற்ற நபர்கள் புகுந்து தங்கள் திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Views: - 471

0

0