தாராபுரம் அருகே இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த மர்மகும்பல் : உறவினர்கள் மறியல்.. போலீசார் விசாரணை!!

18 July 2021, 4:22 pm
Youth Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே 21 வயது இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அடுத்துள்ள விராச்சி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். கூலி தொழிலாளியான இவரது மகன் கோபிநாத் (வயது 21) கலால் தொழிலாளியாக உள்ளார்.

இன்று காலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். உப்பாறு பகுதியில் மடத்துப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரை பின்தொடர்ந்து சென்று மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் வெட்ட முயன்றதால் அதிர்ச்சியடைந்த கோபிநாத் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார்.

அப்போது மர்ம கும்பல் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓடவிட்டு துரத்தி ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே கோபிநாத் உயிரிழந்தார்.

இதுகுறித்து தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் திருப்பூர் மாவட்ட மோப்பநாய் அர்ஜுனன் கொண்டுவரப்பட்டு விசாரணையை தொடங்கினர்.

கோபிநாத்தின் உடலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் கோபிநாத்தின் உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் உரிய விசாரணை கோரி தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இருந்த கோபிநாத்தின் உறவினர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக குற்றவாளிகளை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 30 நிமிடங்களாக சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Views: - 381

1

0