மகன் கண்முன்னே தந்தையை வெட்டிக் கொன்ற மர்மகும்பல் : திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 3:43 pm
Dgl Murder - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பர்னிச்சர் கடையில் புகுந்து மகன் கண்முன்னே தந்தையை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் எருமை கார தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42 ). இவருக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும் விபின் பிரசாத் (வயது 12) என்ற மகனும் உள்ளனர்.

மணிகண்டன் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார் மணிகண்டனின் தந்தை ஜெயமுருகன் திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனை சாலையில் உள்ள சர்ச் பில்டிங்கில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார்.

அந்த கடையை மணிகண்டன் தற்போது நடத்தி வருகிறார். தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் மணிகண்டனின் மனைவி கற்பகம் பர்னிச்சர் கடையில் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.

மணிகண்டன் வாரத்தில் இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திண்டுக்கல்லுக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று மாலை தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த மணிகண்டன் பர்னிச்சர் கடைக்கு வந்துள்ளார்.

அப்போது மனைவி கற்பகம், மகன் விபின் பிரசாந்த் மற்றும் மணிகண்டனை கடையை பார்க்க சொல்லி அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் கடைக்குள் இருந்த மணிகண்டனை சரமாரியாக வெட்ட தொடங்கியது.

இதைப் பார்த்த மகன் விபின் பிரசாத் செய்வதறியாது கடையை விட்டு வெளியில் வந்து விட்டான், மர்ம கும்பல் மணிகண்டனின் தலையை முழுவதுமாக வெட்டி சிதைத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பர்னிச்சர் கடையை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 583

0

0