பிரியாணி உணவகம் தொடங்கிய திருநங்கையை படுகொலை செய்த மர்ம நபர்கள்..! கொலைக்கான காரணம் என்ன?

21 October 2020, 1:15 pm
biriyani Transgender - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கத்தின் தலைவர் சங்கீதா மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. திருநங்கையான இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.

திருநங்கைகள் பிச்சை எடுக்கும் வழக்கத்தை ஒழிக்க நினைத்த இவர் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிதி ஆதாரங்களை திரட்டி திருநங்கைகளின் பணியை உறுதிப்படுத்துவதற்காக கோவையில் உணவகம் ஒன்றை துவங்கினார்.

வடகோவை பகுதியில் கோவை டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் துவங்கப்பட்ட அந்த உணவகத்திற்கு பொதுமக்கள் பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வந்தனர். இவரால் துவங்கப்பட்ட உணவகத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல திருநங்கைகள் வேலைவாய்ப்பை பெற்றனர்.

இந்த சூழலில் சாய்பாபா காலனி அடுத்த என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சங்கீதா.

அப்பகுதியில் தண்ணீர் நிரப்பி வைக்க பயன்படுத்தப்படும் டிரம் ஒன்றில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் டிரம்மை திறந்து பார்த்தபோது, கொலை செய்யப்பட்டு சுமார் மூன்று நாட்களாகி அழுகிய நிலையில் சங்கீதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் சங்கீதா உயிரிழந்த விவகாரத்தை அறிந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் அனைவரும் சாய்பாபா காலனி பகுதியில் ஒன்றுகூடினர்.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே சங்கீதா தொழில்முறை போட்டியால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருநங்கைகள் என்றால் இப்படித்தான் என்ற கோணத்தை மாற்றி, திருநங்கைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சமூகத்தில் திருநங்கைகளின் மேல் நற்பெயரை ஏற்படுத்தியவருக்கு இப்படி ஒரு நிலைமையா என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 30

0

0