தேசிய குடற்புழு நீக்க வாரம்…கோவையில் 4.47 லட்சம் குழந்தைகள் தகுதியானவர்கள்: பயன்பெற மாநகராட்சி ஆணையர் அழைப்பு..!!

Author: Rajesh
15 March 2022, 9:22 am
Quick Share

கோவை: கோவையில் குடற்புழு நீக்க மருந்து பெற 4.47 லட்சம் குழந்தைகள் தகுதியானவர்கள் என மாநகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் தேசிய குடற்புழு நீக்க வாரம் 4ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1 முதல் 19 வரை வயதுடைய அனைத்து குழந்தைகள் மற்றும் 20 வயது முதல் 30 வயதுடைய பெண்கள் தவறாமல் குடற்புழு நீக்க முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது, நாடு தழுவிய குடற்புழு நீக்க வாரம் வரும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து நகர்நல மையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறுகின்றது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 21ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ½ மாத்திரை அல்பெண்டசோல் 200 மில்லி கிராம் (பொடியாக) கொடுக்க வேண்டும். 2 வயதிற்கு மேல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை அல்பெண்டசோல் 400 மில்லி கிராம் வழங்கப்பட வேண்டும். 20 முதல் 30 வயதுடைய பெண்கள் அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை கொடுக்கலாம்.

கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கக்கூடாது. குடற்புழு நீக்க மருந்து பெற தகுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 446 ஆகும். இதில் ஆண் சிறார்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 898 ஆகும். பெண் சிறார்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 548 ஆகும்.

1 வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 482 ஆகும். 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பயன்பெறவுள்ள பெண்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 626 என தெரிவித்துள்ளார்.

Views: - 622

0

0