தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலையீடு சென்னையின் ஆறுகளைக் காக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

11 September 2020, 6:49 pm
adyar 3- updatenews360
Quick Share

சென்னை: அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்கள் குளிக்கவும் அன்றாடத் தேவைகளுக்காகவும் பயன்படுத்திய அடையாறு இன்று தொழிற்சாலைக் கழிவுகளால் சாக்கடையாகிக் கிடக்கிறது. மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருந்த கூவம் நதியும் சாக்கடையான நிலையில் தேசியப்பசுமைத் தீர்ப்பாயத்தின் பார்வை இப்பிரச்சினை மீது திரும்பியுள்ளது.

சென்னையில் உள்ள நீராதாரங்கள் மற்றும் ஆறுகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலக்கப்படுகிறதா..? என்பது குறித்து ஆய்வு செய்யும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அந்த நதிகளைத் தூய்மையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற ஏக்கத்தை சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலேயர் சென்னையை வாங்கி கட்டமைப்புகளை உருவாக்கியபோது சென்னை ஒருபுறம் நீலக்கடலும் ஊரின் நடுவே இரு ஆறுகளும், பல ஏரிகளும் நீர்நிலைகளும் இருக்கும் மீனவர் குடியிருப்புகளாக விளங்கியது. ‘புணரி பொருத பூமணல் அடைகரை’ என்று சங்கப்புலவர் பாடிய நெய்தல் நிலமாகவே சென்னை காட்சியளித்தது.1940-களிலும் கூவம் அழகிய ஆறாகவே சென்னையை அலங்கரித்தது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய் படகுப்போக்குவரத்துக்குப் பயன்பட்டதாக புரட்சி கவிஞர் பாரதிதாசன் பதிவு செய்துள்ளார்.

சென்னையில் தனது இளமைக்காலத்தை கழித்த நடுவயதுக்காரர்களும் 1970-களில் சென்னையில் கால்பதித்தவர்களும் அடையாற்றை அழகான ஆறாகப் பார்த்திருப்பார்கள். புல்வெளிகளும் மாந்தோப்புகளும் வயல்வெளிகளும் சூழ இரண்டு கரைகளும் கவிதைகளாக புரண்டு ஓடும் அடையாற்றில் மழைக்காலத்தில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் பெருக்கெடுத்தோடுவதை வேடிக்கை பார்ப்பதற்கென்றே கூட்டம் கூட்டமாக மக்கள் வருவார்கள்.

கோடைக்காலங்களில் அடையாறு வறண்டு காணப்பட்டாலும் சிறிய அளவில் ஆற்றின் நடுப்பகுதியில் வெண்மையாகவும், பச்சையாகவும் நீர் ஓடிக்கொண்டிருக்கும். மழைநீர் பெருக்கெடுக்கும் காலங்களில் சைதாப்பேட்டையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்வதும் உண்டு. அடையாற்றில் மக்கள் துணிகள் துவைக்கவும் குளிக்கவும் அன்றாடம் போகும் வழக்கம் 1970-களின் இறுதிவரை நீடித்தது.

ஆனால், ஆற்றின் இருகரைகளிலும் தொழிற்சாலைகளும் குடியிருப்புகளும் 1980-களின் தொடக்கம் முதல் பெருகின. அவற்றின் கழிவுகளை சுமந்துசெல்லும் சாக்கடையாக நாளடைவில் அடையாறு மாறிப்போனது. ஆலைக்கழிவுகளைத் தூய்மைப்படுத்தியே விட வேண்டும் என்ற விதியை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவதில்லை.

அண்மையில் சென்னை மெரீனா கடற்கரை அருகே, கடலில் சேரும் ஆறுகளில், ரசாயன நுரைகள் அதிகளவில் இருப்பது தொடர்பாக செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்காக எடுத்து விசாரிக்கிறது. இது தொடர்பாக கள ஆய்வு செய்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தாக்கல் செய்யப்பட்டு உள்ள ஆய்வறிக்கையில் கடலில் ஆறுகள் சேரும் இடத்தில், மழைக்காலத்தின் போது, கீழேஉள்ள கழிவுகள் மேலே வருவதால், நுரை ஏற்பட்டிருக்கலாம். மேலும், சென்னைக் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சுத்திகரிக்கப்படாத அல்லது பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், அடையாறில் விடப்படுகிறது. இதனாலும், நுரை ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதையடுத்து, சென்னையில் உள்ள நீராதாரங்கள் மற்றும் ஆறுகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. தற்போதைய நிலையில் உரிய கள ஆய்வு செய்யப்பட்டு கழிவுநீர் கலக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு சென்னையின் ஆறுகள் திரும்ப வாய்ப்பில்லை என்றாலும், சாக்கடைகளாக இருக்கும் நிலையாவது மாறாதா என்ற ஏக்கம் துளிர்விட்டிருக்கிறது.

Views: - 0

0

0