வரும் ஞாயிறு மட்டும் அனுமதி கொடுங்க! பூ வியாபாரிகள் கோரிக்கை!!
28 August 2020, 6:44 pmகன்னியாகுமரி : ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊராடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தோவாளை பூ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். ஓணம் பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்காக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் குமரி மாவட்டத்திற்கு வந்து செல்வார்கள். அதனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் ஓணம் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட உள்ளது .
மக்கள் அவரவர் வீடுகளில் நெருங்கிய உறவினர்களுடன் ஓணத்தை கொண்டாடுகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் குமரிமாவட்டதிற்கு கேரளா மக்கள் வருகை வழக்கம் போல் இல்லை. இருந்தபோதிலும் பலர் உரிய அனுமதி பெற்று குமரி மாவட்டத்திற்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும். எனவே அன்றைய தினம் முழுவதும் ஊராடங்கில் இருந்து குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தோவாளை பூ வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் புகழ்பெற்ற தோவாளை பூ மார்க்கெட் வியாபாரிகள் முழு ஊரடங்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் வியாபாரிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக கடை திறக்காமல் இருந்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் எனவே அந்த ஒரு நாளும் முழு ஊராடங்கில் இருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.