பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் கூறிய முக்கிய தகவல்!!
20 January 2021, 6:22 pmஈரோடு : நீட்தேர்வு பயிற்சி மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் மாலை 6 முதல் 8 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் அனைத்துறை அதிகாரிகள் அலுவர்கள் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும் என்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் அரசு அறிவித்த நாட்களில் விடுமுறை விடப்படும் என கூறினார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் 92 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு அழைக்கப்படுகிறார்கள். எப்போதும் 60 நாட்களுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும். அப்படி அறிவித்தவுடன் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
மீதமுள்ள வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அது பின்னால் அறிவிக்கப்படும் என்றும், தற்போது உள்ள வேலை நாட்களில் 60 சதவீதம் பாடத்தை நடத்த முடியாது எனக்கூறிய கல்வியாளர்கள் கருத்திற்கு பதிலளித்த அமைச்சர், கல்வியாளர்கள் தினமும் ஒவ்வொன்றை கூறிவருகின்றன. அவர்கள் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்றார்.
நீட்த்தேர்வு பயிற்சி பெறும் மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் ஆன்லைன் நீட் பயிற்சியை கற்று பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார்.
0
0