பள்ளியில் வெடித்த சாதிச்சண்டை : இரு தரப்பு மாணவர்கள் சரமாரித் தாக்குதல்… பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி ஆக்ஷன்..!!!

Author: Babu Lakshmanan
2 October 2021, 6:22 pm
Quick Share

நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் இரு சமூக மாணவர்கள் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கிடையே சைக்கிள் நிறுத்தும் தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இது குறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்மந்தப்பட்ட மாணவர்களை காவல் நிலையம் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஜான்ஸ் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அந்த வீடியோவில் இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக, பள்ளி எதிரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் மெயின் ரோட்டில் வைத்து இந்த தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் கல்லால் எறிந்தும், சரமாரியாக கையால் அடித்தும் தாக்கி கொள்கின்றனர். பல மாணவர்கள் இந்த மோதல் சம்பவத்தை வேடிக்கை பார்ப்பதும் காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஜாதி ரீதியான பகை காரணமாகவே மாணவர்களிடையே இந்த கலவரம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இருவேறு சமூகத்தை சேர்ந்த 2 மாணவர்களுக்கு மட்டுமே முதலில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜாதி ரீதியாக இரு மாணவர்களுக்கும் அவரவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆதரவளித்து மோதல் போக்கில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தகராறில் ஈடுபட்ட ஒன்பது மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் (டிசி) வழங்கி பள்ளி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே நெல்லையில் சாதி மோதல் காரணமாக சமீபத்தில் தொடர் கொலைகள் அரங்கேறி சூழ்நிலையில், பள்ளி மாணவர்கள் இடையே ஜாதி ரீதியான மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 603

0

0