புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்டப் போராட்டம் : திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்..!

1 August 2020, 5:05 pm
Stalin 02 updatenews360
Quick Share

சென்னை : இடஒதுக்கீடு வழக்கை போலவே, புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான சட்டப் போராட்டத்திலும் வென்று காட்டுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு அதன் மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்து கொண்டிருக்கிறது மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்துடன் நோக்கத்துடன் மத்தியிலே உள்ள ஆட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதனால் மக்கள் பாதிக்கப்படும் போது நீதிமன்றத்தை நாடி அவர்களின் உரிமையை பாதுகாப்பதில் திமுக முன்வரிசையில் நிற்கிறது. மத்திய அரசின் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடங்கள் தொடர்பான வழக்கில் திமுக பெற்றுள்ள வெற்றியை மக்களிடம் எடுத்துரைத்து சமூக நீதியில் தமிழகம் எப்போதும் ஒன்றிணைந்தது நிற்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

கொரோனா பேரிடரால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசின் இன்னொரு கோரமுகம்தான் புதிய கல்விக் கொள்கை.
உண்மையில் அது புதிய கல்விக் கொள்கை அல்ல; பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்பு மிக்க வர்ண பூச்சு.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய ஆட்சியாளர்கள் வாய்மூடி கிடக்கின்ற நிலையில், பொதுமக்களின் மனதை ஆட்சி செய்கின்ற திமுக, தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து நின்று மாணவர்களின் எதிர்கால நலன்காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்ட போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்தியாவை சிதைக்கும் பேரபாய சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம். இடஒதுக்கீடு வழக்கை போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம். சமூக நீதி காப்போம்! சமத்துவ கல்வி வளர்ப்போம்!, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0