வெளிநாட்டுக்கு சென்றவர்களின் சொத்துக்களை திருடுவதை தடுக்க புதிய சட்டம் : அமைச்சர் மூர்த்தி தகவல்

Author: Babu Lakshmanan
2 September 2021, 8:27 pm
minister moorthi - updatenews360
Quick Share

சொத்துக்களை விட்டு வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களை ஏமாற்றும் தவறுகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டத்தை தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டசபை முடிந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது போலி பத்திரம் பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது :- போலி பத்திரம் தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதை ரத்து செய்யும் அதிகாரத்தை பத்திரப்பதிவு துறையிலேயே செய்வதற்கு அமல் படுத்தியுள்ளோம். மேலும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். கடந்த ஆட்சியில்செய்யப்பட்ட போலி பத்திரங்கள், ஆள்மாறாட்டங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் என போலியாக பதிவு செய்துள்ளார்கள் என்பதால் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை புதிதாக கடன் பெறுபவர்கள் நேரில் சென்று பதிய வேண்டும். ஆனால் தற்போது ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவித்தார்.

மேலும், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்போது முடிக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “தற்போதுள்ள அமைச்சர் அதை ஆய்வு செய்து விரைவாக முடிக்க சொல்லியுள்ளார். பத்திரப் பதிவுத் துறையில் இது வரலாறு காணாத மாற்றம். இதுவரை புதிதாக சொத்துக்கள் வாங்கியவர்கள், சொத்துக்களை விட்டு வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களை ஏமாற்றும் தவறுகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டத்தை தாக்கல் செய்துள்ளோம். இந்த புதிய சட்டத்தை பொருத்தவரை ஆளுநர், ஜனாதிபதி வரை சென்று இரண்டு மூன்று மாதங்களில் அமலுக்கு வரும், என்றார்.

Views: - 428

0

0