தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிக்காக புதிய பல்நோக்கு மையம் : அமைச்சர் கீதா ஜீவன் திட்டம்!!

Author: Udayachandran
30 July 2021, 8:12 pm
Geetha Jeevan -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : தொழில் வளர்ச்சிக்காக புதிதாக பல்நோக்கு மையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ்  தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் ஆகியோர் பங்குபெற்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் புதிதாக மாநகராட்சி பகுதிகளில் தொடங்கப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளையும் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினசரி குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 வருடம் 6 மாதத்திற்குள் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் சேவை வழங்கப்படும்.

2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த பணிகளை வேகப்படுத்தி விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடைத் திட்டம் விரிவுப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி சாலை திட்ட பணிகள் இன்னம் 6 மாத காலத்திற்குள்  நிறைவுபெறும்.

மேலும் தூத்துக்குடி தொழில் வளர்ச்சிக்காக மாநகராட்சி பகுதியில் பல்நோக்கு மையம் புதிதாக தொடங்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் தொடங்கும் என்றார்.

Views: - 77

0

0