சென்னையைச் சேர்ந்த பெண் லண்டனில் கடத்தி கட்டாய மத மாற்றம்..! ஜாகீர் நாயக்கின் தொடர்பு குறித்து என்ஐஏ விசாரணை..!

25 August 2020, 12:51 pm
NIA_Updatenews360
Quick Share

லண்டனில் சென்னையைச் சேர்ந்த பெண்ணை பங்களாதேஷ் நபர்கள் கடத்திச் சென்றது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

லண்டனில் படித்துக்கொண்டிருக்கும் தனது மகளை பங்களாதேஷ் நாட்டினர் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த ஆண்டு மே மாதம் சென்னை குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனது மகளை மூளைச்சலவை செய்து இஸ்லாத்திற்கு மாற கட்டாயப்படுத்துவதாக தந்தை குற்றம் சாட்டினார்.

கடத்தலில் ஜாகிர் நாயக்கின் தொடர்பு :
முன்னாள் பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் சர்தார் ஷாகாவத் உசேன் போகுலின் மகன் நஃபீஸ், எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நஃபீஸ் அந்த பெண்ணுடன் நட்பு கொண்டு கடத்தியதாக கூறப்படுகிறது.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கின் பெயரும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் நாயக்கோடு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு பங்களாதேஷ் குழுவின் தொடர்பு குறித்து என்ஐஏ தற்போது விசாரணை செய்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதில் சதி, மிரட்டல், கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றுடன் மிரட்டி பணம் பறித்தல் முயற்சி மற்றும் கொலை மிரட்டல் ஆகியவையும் அடங்கும்.

உயர் படிப்புக்காக லண்டன் சென்ற சிறுமி, அந்தக் கும்பலின் வலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. என்ஐஏவால் சந்தேகிக்கப்படும் குழு, அங்கு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.