வெள்ளத்தில் மிதக்கும் குந்தா, தங்காடு : முகாம்களில் 900 பேர் தங்க வைப்பு!!

6 August 2020, 5:53 pm
nilgiri collector- updatenews360
Quick Share

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்மேற்கு பருவ காற்று காரணமாக நீலகிரி மலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இன்னும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி ஒரு மலை மாவட்டம் என்பதால், நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுதல், வெள்ளப் பாதிப்பு ஆகிய பாதிப்புகளை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

மேலும், அதி கன மழையில் சிக்கியுள்ள நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் தீ யணைப்பு வீரர்கள் பல்வேறு இடங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

இந்த நிலையில், தமிழக அரசின் முதன்மை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுப்ரியா சாகுவுடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொட்டும் மழையிலும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பாதிப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படும் குந்தா, தங்காடு, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது மழையினால் பாதிக்கப்பட்ட 900 பேர் 25 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு உணவு மற்றும் அத்தியாவசயப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “தற்போது பேரிடர் மீட்பு குழுவினர் அதிகளவு பாதிப்பிற்குள்ளான  குந்தா மற்றும் கூடலூர் பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நாளை மறுநாள் வரை  கன மழை எச்சரிக்கை உள்ளதால், சரிவான மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்கள் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதம் குறித்து முதலமைச்சரிடம் இன்று காலை கேட்டறிந்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தம்மை அறிவுறுத்தியுள்ளார். மழை மற்றும் மரம் விழுந்து இறந்த இருவர்களின் குடும்பத்தினருக்கு தமது சார்பாக சென்று ஆறுதல் கூறுமாறு முதலமைச்சர் அறவுறுத்தினார், எனக் கூறினார்.

Views: - 13

0

0