புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை: தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு

Author: kavin kumar
10 January 2022, 8:07 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை என்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்று பரவலை கட்டுபடுத்த பல மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரியிலும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவிட் மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்று கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை என்றாலும் காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை வசதி, பிராணவாயு படுக்கைகள், மருந்துகள், மருத்துவப் பணியாளர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். புதுச்சேரியில் தடுப்பூசி போடுவதும் அதற்கான ஆவணத்தை வைத்துக்கொள்வதும் அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Views: - 401

0

0