வெடிகுண்டு வெடித்தது போல சத்தம்… 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் : சிதறிய கார்.. ஒருவர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 6:44 pm
Car Balst Bomb -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : சாத்தான்குளம் அருகே பயங்கர வெடி விபத்தால் சுற்றியுள்ள 30 வீடுகள் சேதமடைந்த நிலையில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது காரில் பயங்கர வெடிமருந்தை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் அவரது காரிலிருந்து அலாரம் அடித்துள்ளது.

இதனால் பாலகிருஷ்ணன் தனது காரில் உள்ள ரிமோட் மூலம் காரை லாக் செய்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது காரில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது.

மீண்டும் சிறிது நேரத்தில் பயங்கர சப்தத்துடன் பாம் வெடித்தது போல சத்தம் கேட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக ஊர் முழுவதும் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.

இதனால் நள்ளிரவு முதலே அப்பகுதியில் மிகுந்த பரபரப்பானது. மேலும் பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தை சட்ட விரோதமாக தனது காரில் ஏற்றி வந்தது மிகப்பெரிய தவறு என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் வெடி வெடித்ததால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் பாகங்கள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் வெடிமருந்துகளும் சேதமான வீடு மற்றும் காரின் பாகங்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தது.
நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் அனைத்தும் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 162

0

0