டிராபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட்… நீதிமன்றத்தின் அதிரடிக்கு காரணம் இதுதான்..!

14 February 2020, 7:35 pm
Traffic Ramasamy 01 updatenews360
Quick Share

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டை சென்னை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ல் கனமழை பெய்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், வெள்ளக்காடானது. பலர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்தனர். மழையால் தத்தளித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

அந்த நேரத்தில், வெள்ள நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பறித்துச் செல்வதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான அவரது வீடியோ சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டன.

இதையடுத்து ஜெயலலிதாவின் நற்பெயர் மற்றும் புகழுகக்கு களங்கம் கற்பிப்பதாகக்கூறி, 2016ஆம் ஆண்டு டிராபிக் ராமசாமிக்கு எதிராக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஏற்கனவே பிடிவாரண்ட் உள்ள நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது புதிதாக பிடிவாரண்ட் பிறப்பிக்க அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சென்னை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்ததோடு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.