பேருந்து நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த ஓய்வுபெற்ற ஓட்டுநர் : கடவுளாக மாறிய செவிலியர்… குவியும் பாராட்டு!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 12:37 pm
Quick Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து அபாயகரமான கட்டத்துக்கு சென்ற ஓய்வு பெற்ற ஓட்டுனரின் உயிரை காப்பாற்றிய அரசு செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிக்கின்றது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வரும் விஜய நிர்மலா சிவா என்பவர் நேற்று பணி முடித்துவிட்டு, தன்னுடைய சொந்த ஊரான கம்மவார்பாளையம் செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

இவர் நின்று இருந்த இடத்திலிருந்து 20 அடி தூரம் தள்ளி ஒரு முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்த முதியவரை சுற்றி ஏராளமான மக்கள் கூடி விட்டனர்.

இதைக் கண்ட செவிலியர் விஜய நிர்மலா சிவா, சற்றும் தாமதிக்காமல், நாடி துடிப்புகள் குறைவாகி பேச்சு மூச்சு இன்றி அபாய கட்டத்தில் இருந்த முதியோருக்கு ,எந்தவித மருத்துவ உபகரணங்களும் இன்றி சிபிஆர் (இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை) முறையில் தீவிரமான முதல் உதவி சிகிச்சையை மேற்கொண்டார்.

முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே அந்த முதியவருக்கு சுயநினைவு திரும்பியது. அங்கு கூடியிருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் உட்பட பொதுமக்களைம், பயணிகளும் அந்த முதியவர் இறந்து விட்டார் என்றே கருதிய நிலையில், அவருக்கு நினைவு திரும்பி வந்ததைக் கண்டு மிகவும் ஆச்சரியமுற்றனர்.

அது மட்டுமல்லாமல் 108 வாகனத்தை வரவழைத்து அதில் அந்த முதியவரை ஏற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்குள்ள சீனியர் மருத்துவர்களுக்கும் விஜய நிர்மலா சிவா தகவல் அளித்தார்.

தன்னுடைய பணி முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த அரசு செவிலியர் ஒருவர் , கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை, எந்த விதமான மருத்துவ உபகரணங்களின்றி சிபிஆர் முறையில் சிகிச்சை அளித்து அந்த முதியவரின் உயிரை மீட்டு தந்த அரசு செவிலியர் விஜய நிர்மலா சிவா அவர்களுக்கு ஏராளமான வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிக்கின்றது.

அந்த முதியவர் பற்றி விசாரித்ததில், போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியது, அந்த முதியவர் பெயர் ராஜேந்திரன் (68) என்றும், இவர் போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று தற்போது பேருந்து நிலையத்தின் அருகே உள்ள 4 கடைகளை நடத்தி வருவதாகவும் தெரிய வந்தது. மேலும், ராஜேந்திரனின் ஒரு மகன் மருத்துவராகவும், மற்றொருவர் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளதாகவும் கூறினர்.

அரசு மருத்துவமனைகளிலேயே சரியான சிகிச்சை அளிக்க முடியாத இந்த காலகட்டத்தில் , குளுக்கோஸ் லெவல் குறைந்து பேச்சு மூச்சு இல்லாமல் நாடித்துடிப்பு அனைத்தும் இறங்கி அபாய கட்டத்திலிருந்த ஒரு முதியோருக்கு எந்த விதமான மருத்துவ உபகரணங்களுமின்றி, உயிரை காப்பாற்றிய செயலை பார்க்கும்போது மனிதநேயம் ஆங்காங்கே உள்ளது என்றே கூறத் தோனுகிறது.

Views: - 201

2

1