பாதிப்பு குறைந்ததால் வேலை பறிப்பு.. நெருக்கடியான நேரத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 1:41 pm
Nurses Job Stop - Updatenews360
Quick Share

மதுரை : கொரோனா பாதிப்பு குறைந்தால் கொரோனா மருத்துவமனையில் பணிபுரிந்த ஒப்பந்த செவிலியர்களை பணியில் இருந்த திருப்பி அனுப்பியதாக பாதிக்கப்பட்ட செவிலியர்கள் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மெல்ல மெல்ல பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தினமும் ஆயிரத்து ஜநூறுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது.

கொரோனா சிகிச்சைக்காக போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாததால் சுகாதாரத்துறை மூலம் தற்காலிகமாக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் கடந்த மே மாதம் மருத்துவர்கள் செவிலியர்க, லேப் டெக்னீசியன்கள் தேர்வு செய்யப்பட்டு 300க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தேர்வானவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு கொரோனா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மதுரை தோப்பூர் அரசு கொரோனா மருத்துவமனையில் பணியில் இருந்த 25க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை 30 நாட்களிலேயே பணியில் இருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த செவிலியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் மூன்றாம் கட்ட கொரோனா (டெல்டா பிளஸ் கொரேனா) பாதிப்பால் மதுரையில் இளைஞர் உயிரிழந்த நிலையல், மத்திய சுகாதாரத்துறை மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஒரு புறம் கொரோனா குறைந்ததாக கூலி ஒப்பந்த செவிலியர்களை பணியில் இருந்து விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து செவிலியர்கள் கூறும் போது, ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் நல்ல ஊதியத்தில் பணியில் இருந்தோம். தற்போது அரசு ஒப்பந்த ஊழியர்களாக பணி வழங்குவதை கூறியதை நம்பி அந்த வேலையை விட்டு நெருக்கடியான நேரத்தில் பணிபுரிந்தோம்.

தற்போது பாதிப்பு குறைந்ததால் எங்களை ஒப்பந்த காலம் நிறைவடைவதற்குள் கைவிடுவது எந்த வகையில் நியாயம் என்றும், அரசு பணி நீட்டிப்பு காலத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

Views: - 282

0

0