மீண்டும் சூறாவளி சுற்றுப்பயணம்: 7ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி..!!

4 February 2021, 3:34 pm
cm campaing - updatenews360
Quick Share

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன் நிறுத்தப்பட்டுள்ளார். இதையொட்டி கடந்த டிசம்பர் மாதமே எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்த அவர் தற்போது இரண்டாவது கட்டமாக மீண்டும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த மாதம் 20 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார்.

இப்போது வருகிற 7ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். போரூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் திறந்த வேனில் நின்றபடி பேசுகிறார். அதன் பிறகு அம்பத்தூர் சென்று மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து அவர்களின் மத்தியில் உரையாற்றுகிறார்.

இந்த கூட்டம் முடிந்ததும் ஆவடியில் தகவல் தொழில்நுட்ப குழுவினரை சந்திக்கிறார். இதன் பிறகு திருவள்ளூர் சென்று விவசாயிகள், நெசவாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து மாதவரம் சென்று பேசுகிறார். இறுதியாக மீஞ்சூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, அமைச்சர்கள் பென்ஜமின், க.பாண்டியராஜன், அலெக்சாண்டர் மற்றும் திருத்தணி ஹரி ஆகியோர் பிரசார கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

Views: - 0

0

0