வீட்டுக் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை : 5 மணி நேரம் நடந்த போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2021, 6:22 pm
Home Lock Child -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வீட்டிற்குள் இருந்த ஒன்றரை வயது குழந்தை கதவினை தவறுதலாக பூட்டி கொண்டதால் தனியாக சிக்கிக்கொண்ட நிலையில் தீயணைப்பு துறையினர் குழந்தையை மீட்ட சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது.

திண்டுக்கல் பெங்கில்ஸ்ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் சிவகாமி நாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது ஒன்றரை வயது குழந்தை ஆசிஸ் அதர்வா. இன்று காலை வழக்கம்போல் சிவகாமி நாதன் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் குழந்தையை பராமரித்து வந்த அவரது பாட்டி பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது வீட்டு ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆசிஸ் தவறுதலாக கதவினை தாழ்ப்பாள் போட்டு பூட்டிக்கொண்டுள்ளது. மீண்டும் குழந்தையினால் கதவை திறக்க தெரியவில்லை.

இதன் காரணமாக வீட்டில் உள்ளேயிருந்து அழத் தொடங்கியது. இதில் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பாட்டி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் கதவைத் திறக்க முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு நிலை அலுவலர் மயில் ராஜ் தலைமையிலான குழுவினர் ஹைட்ராலிக் டோர் ஓபனர் என்ற கருவி மூலம் கதவினை உடைக்காமல் தாழ்ப்பாளை மட்டும் உடைத்து
குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

5 மணி நேரம் போராடி குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு குழந்தையின் பாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டி வருகின்றனர்.

Views: - 381

1

0