கேஸ் அடுப்பு சரி செய்வது போல் நடித்து ஒரு லட்சம் மதிப்பிலான நகை அபேஸ் : சிசிடிவி காட்சி மூலம் சிக்கிய திருடன்!!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2021, 11:38 am
திருப்பூர் : கேஸ் அடுப்பு சரி செய்து தருவது போல் நடித்து ஒரு லட்சம் மதிப்புள்ள மூன்றரை சவரன் நகையை திருடியவனை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகேயுள்ள, பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்- சகுந்தலா தம்பதியினர். இந்நிலையில் தனது வீட்டில் ரிப்பேராக இருந்த கேஸ் அடுப்பை சரி செய்ய, தனது வீட்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற முன், பின் அறிமுகம் இல்லாத கேஸ் அடுப்பை சரி செய்யும் நபரை தனது வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.
கேஸ் அடுப்பை சரி செய்ய வந்த மர்மநபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சமையலறையில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டான். இச்சம்பவம் குறித்து பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் சகுந்தலா புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் பெருமாநல்லூர் அடுத்துள்ள கணக்கம்பாளையத்தில் அந்த மர்மநபரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அந்நபர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த அஜீத் என்பதும், ஒரு லட்சம் மதிப்பிலான மூன்றரை பவுன் தங்க செயினையும் திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அஜீத்தை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து தங்க செயினையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், அங்கீகரிக்கப்பட்ட அறிமுகமான நபர்களையே இதுபோன்ற பணிக்கு வீட்டினுள் அனுமதிக்க வேண்டும் எனவும், அறிமுகமில்லாத நபர்களை அனுமதித்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் என எச்சரித்தனர்.
0
0