“ஆடி அதிரடி ஆஃபர்“ : ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2021, 1:01 pm
Petrol Free For Meat- Updatenews360
Quick Share

மதுரை : ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என திருமங்கலத்தில் தனியார் இறைச்சிக் கடையின் அறிவித்துள்ள ஆடி ஆஃபருக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்-

தற்போது உள்ள காலகட்டங்களில் இறைச்சியின் விலையும் பெட்ரோல் விலையும் உச்சத்திற்கு சென்றுவிட்டது. இச்சூழ்நிலையில் அசைவப் பிரியர்கள் இறைச்சி வாங்க முடியாமல் பெட்ரோலும் வாங்க முடியாத ஒரு சூழல் உருவாகி உள்ளது.

பொதுவாக ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி விலைக்கு பெயர் போனது ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் தான். இதனை மிஞ்சும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் இறைச்சிக்கடை ஆடி மாதம் முழுவதும் அதிரடி ஆஃபர் வழங்கி நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது என்னவென்றால் ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்பது தான் திருமங்கலம் தெருவில் உள்ள மகிழ் இறைச்சிக்கடை சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார்.

இங்கு ஆடு, நாட்டுகோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக்கோழி, கின்னிக்கோழி எனபல ரகங்களில் இறைச்சிகள் கிடைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடைதுவங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம் 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் அதற்கு ஒரு படி மேலாக தற்போது ஆடி மாதம் என்பதால் ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகளில் மிஞ்சும் வகையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடியாக அறிவித்து போஸ்டர் ஒட்டி திருமங்கலம் மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதில் சந்திரனின் இறைச்சிக் கடையில் ஏற்கனவே ஒரு கிலோ இறைச்சி அறிவிக்கப்பட்ட அதே விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கூடுதலாக கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெகுதூரத்தில் இருந்து இறைச்சி வாங்க இந்த கடைக்கு வரக்கூடிய நபர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி வருவது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சந்திரன், தனது தந்தை காலத்தில் திருமங்கலத்தில் தங்கள் குடும்பம் மட்டும் தான் வான்கோழி வளர்த்து விற்பனை செய்து வந்ததாகவும் தற்போது மக்களுக்கு நல்ல சத்தான இறைச்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காக உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இறைச்சிகளை விற்பதாக தெரிவித்தார்.

தங்களது கடைக்கு நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர், கூத்தியார்குண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆடி மாதம் அதிரடி ஆபராக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருவதாகவும் ஆடி மாதம் முழுவதும் இந்த ஆஃபர் இருக்கும் எனவும் தெரிவித்தார். தனியார் இறைச்சிக்கடையின் இந்த ஆடி ஆஃபர் அசைவப் பிரியர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது

Views: - 332

0

0