ஊரடங்கால் பனை ஓலைக்கொட்டன்கள் தேக்கம் : வீடுகளில் காட்சி பொருளாக மாறியது.. தமிழக அரசுக்கு கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2021, 1:42 pm
Palm Manufacturers - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகளுக்கு தடை, கோவில் திருவிழாக்கள் ரத்து மற்றும் பொது போக்குவரத்து இல்லை என்பதால் விளாத்திகுளம் அருகே பனை ஓலைக்கொட்டன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனை ஓலைக்கொட்டன்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் 4 வகையான பனை ஓலைக்கொட்டன்கள் ஸ்வீட்ஸ் கடைகள், காரம், இனிப்பு கடைகளுக்கு அதிகளவில் விற்பனை செய்யபட்டு வருகிறது. ஸ்வீட்ஸ், காரம், இனிப்பு வகைகளை பனை ஓலைக்கொட்டன்களில் வைப்பத்தினால் அவை எளிதில் கெட்டுப்போகாது என்பதால் கடை உரிமையாளர்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.

மேலும் பிளாஸ்டிக் பைககளுக்கு மாற்றாக இருக்கும் என்பதால் பனை ஓலைக்கொட்டன்களுக்கு தனி இடமும் உண்டும். நாகலாபுரத்தில் தயாரிக்கப்படும் பனை ஓலைக்கொட்டன்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பினை முன்னெடுத்த காரணத்தினால் ஓலைக்கொட்டன்களுக்கு மவுசு கூடியது மட்டுமின்றி இதனை நம்பி இருந்த தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியாக வேலையும் கிடைத்தது.

ஸ்வீட்ஸ், காரம், இனிப்பு கடைகள் மட்டுமின்றி இறைச்சிகடைகளிலும் பனை ஓலைக்கொட்டன்கள்; பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பனை ஓலைக்கொட்டன்கள் தேவைகள் அதிகரித்த காரணத்தினால் நாகலாபுரம் பகுதியில் இரவு பகலாக பனை ஓலைப்பெட்டிகள் தயாரிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கடந்த 2 ஆண்டுகளாக பனை ஓலைக்கொட்டன்கள் தொழிலை முடங்கி போட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதாலும், பொது போக்குவரத்து இல்லை என்பதாலும் பனை ஓலைக்கொட்டன்களை கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. கடைகள் விற்பனையை தாண்டி, பனை ஓலைக்கொட்டன்களுக்கு அதிக மவுசு இருப்பது கோவில் திருவிழாக்களில் தான்.

அனைத்து மத கோவில் திருவிழாக்களிலும் இனிப்பு,கார வகைகள் பனை பனை ஓலைக்கொட்டன்களில் தான் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறவில்லை என்பதால் பனை ஓலைக்கொட்டன்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பனை பனை ஓலைக்கொட்டன்கள்; விற்பனை கொண்டு செல்லவில்லை என்பதால் ஒவ்வொரு வீடுகளிலும் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள பனை ஓலைக்கொட்டன்கள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பனை ஓலைக்கொட்டான்கள் தேங்கமடைந்துள்ள நிலையில் இவர்களின் வாழ்வாதரத்தினை கருத்தில் கொண்டு அரசு உதவினால் நன்றாக இருக்கும் என்பது மட்டுமின்றி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இந்த தொழிலாளர்களின் வாழ்வும் சிறக்கும் என பனை ஓலைக்கொட்டன் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 119

0

0