மின்னணுத் துறையில் தமிழகம் முன்னேற வாய்ப்பு : பொறியியல் பட்டதாரிகளுக்கு பொற்காலம் பிறக்குமா?

8 September 2020, 12:44 pm
TN Electronics - updatenews360
Quick Share

சென்னை : தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை மின்னணுத் தொழிற்துறையில் மாநிலத்தை முன்னேற்ற வாய்ப்பு வழங்குவதோடு இத்துறையில் படித்துவிட்டு வேலைதேடிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துத் தரும் என்று தொழிற்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பொறியியல் துறைகளில் பட்டம் பெற்ற இளைஞர்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றனர். குறிப்பாக மின்னணுத் துறையிலும் பட்டம் பெற்ற பலர் வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளனர். பொறியியல் துறையில் பட்டம் பெற்றோர் பலர் தற்போது வேலை வாய்ப்பில்லாமல் இருப்பதால் அத்துறையில் படிப்புகளுக்கு இளைஞர்கள் செல்லத் தயங்கும் நிலை இருக்கிறது.

பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டு வருகின்றன. இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் பெரிய அளவில் சேர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்னணுத்துறை வளர்வதும் புதிய முதலீடுகள் அதிகரிப்பதும் மின்னணுத்துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணுத் துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்நிறுவனங்கள் நிதி நிறுவனங்களில் இருந்து பெறும் கடன்களுக்கு அதிகபட்சமாக 5% வரை வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

முதன்முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு 6 மாத காலத்துக்கு மாதம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம், பெண் ஊழியர்களுக்கு 6 மாத காலத்துக்கு மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம் அளிப்பது வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ஏற்கெகவே 16 சதவீதமாக உள்ளது.

கணினி, மின்னணுவியல், ஒளியியல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் ‘தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் கொள்கை-2020’ மின்னணு உற்பத்தியில் மேலும் முதலீடுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீட்டுத்தொகையில் 30% வரை மூலதன மானியம் வழங்கப்படும் என்ற சலுகையும் அறிவித்துள்ள மாநில அரசு 2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மின்னணு துறையின் உற்பத்தியை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

மின்னணு பழுது பார்க்கும் பூங்காங்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கான வசதிகள் அமைக்கப்படவும் 2024-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் நபர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பெரிய அளவு முதலீடுகளுக்கு சிறந்த தொழில் சூழலை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட முதலீடுகளுக்கு சிறப்புத் தொகுப்பு சலுகை வழங்ககப்படும் எனவும் தமிழ்நாடு அறிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் இல்லாத செமி கண்டக்டர் புனையமைப்பு மற்றும் மின்னணு பழுது பார்க்கும் பூங்காக்கள் துறையிலும் தமிழ்நாடு தடம் பதித்திட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கை 25 சதவீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

கொரானா பரவல் கட்டுப்பாடுகள் குறைந்து பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறத்தொடங்கிய சூழலில் தொழிற்துறையினர் முதலீடுகளை அதிகரிக்கவும் வேலைக்கு ஆட்களை எடுக்கவும் உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தும் தொழிலாளர் வருகையையும் சரக்குப் போக்குவரத்தையும் சீர்படுத்தும் நிலையில் சரியான நேரத்தில் தமிழக அரசு மின்னணுக்கொள்கையை வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

Views: - 0

0

0