பல்லடம் பாரத் ஸ்டேட் வங்கி கொள்ளை விவகாரம் : 10 மாதத்திற்கு பிறகு முக்கிய கூட்டாளி கைது!!

20 November 2020, 6:01 pm
Tirupur Bank Theft Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியிலுள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் கடந்த பிப்ரவரி மாதம் வங்கியின் ஷட்டரை உடைத்து சுமார் 300 பவுன் தங்கம் மற்றும் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது இந்த சம்பவம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீதா மிட்டல் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். தனிப்படை போலீசார், பீகார், மத்தியபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனில்குமார், இஸ்ரோ கான், ஆச்சார்யா, ராமன்ஜி உள்ளிட்ட 4 பேரை கடந்த மார்ச் மாதம் கைது செய்த நிலையில் இக்கூட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டம் தோடாபீம் தாலூக்கா வை சேர்ந்த கெஜராஜ் (வயது 33) என்பவனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஹரியானா போலீசார் வேறு ஒரு வழக்கில் கெஜராஜை கைது செய்தனர். பல்லடம் வங்கி கொள்ளை சம்பவத்தில் கெஜராஜுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த ஹரியானா போலீசார்இது குறித்து காமநாயக்கன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கெஜராஜை பல்லடம் அழைத்து வருவதற்கான ஆவணங்களை தனிப்படை போலீசார் ஹரியானா போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கெஜராஜைஅழைத்து கொண்டு ஹரியானா போலீசார் இன்று பல்லடம் வந்தனர்.

பின்னர் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிராம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
10 மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் வங்கி கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0