பழனிக்கு குடும்பத்துடன் வந்த பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் : ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு!!

By: Udayachandran
15 September 2021, 2:13 pm
Mariappan - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள அருள்மிகு நாக காளியம்மன் கோயிலில் பாராஓலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார்.

சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டி சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. தடகள வீரரான இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்தார். இதனால் “தங்க மகன் மாரியப்பன்” என்று பிரபலமான இவரை மத்திய, மாநில அரசுகள் பாராட்டி கவுரவித்தன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜப்பான் டோக்கியோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து நாட்டுக்கு புகழ் சேர்த்து வரும் மாரியப்பனை மத்திய, மாநில அரசுகள் பாராட்டி கவுரவம் செய்து வருகின்றன.

இந்நிலையில் மாரியப்பன் இன்று பழனி வருகை புரிந்தார். பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள அருள்மிகு நாக காளியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாரியப்பன் பழனி வந்ததை அறிந்து ஏராளமான ரசிகர்கள் கோயிலுக்கு வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

Views: - 182

0

0