விவசாயிகளின் உயிர்மூச்சை நிறுத்தாதீங்க ; பரந்தூர் புது விமான நிலையத்திற்கு எதிர்ப்பு.. கருப்பு கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம்!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 2:25 pm
Quick Share

காஞ்சிபுரம் : சர்வதேச விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேட்டு பரந்தூர் பகுதி மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அடங்கிய 12 கிராமங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் புதியதாக சர்வதேச‌ பசுமை விமான நிலையம் அமைய இருப்பதாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் தகவல் பரவியது.

சென்னை மாநகரத்தின் இரண்டாவது விமான நிலையம் சென்னையிலிருந்து 70 கி.மீ.தொலைவில் பரந்தூரில் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அவர்களும் அறிவித்துள்ளார்.

CM Staling Against - Updatenews360

சுங்குவார் சத்திரம் அடுத்துள்ள ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து நாகப்பட்டு ,நெல்வாய், குணகரம் பாக்கம், தண்டலம், பொடவூர், மேலேரி, இடையார்பாக்கம் காட்டுப்பட்டூர், மேட்டு பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் மொத்தம் 4,800 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை அமைப்பதற்காக பொதுமக்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனால், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பகுதி மக்களிடம் ஒருவித அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. தங்களின் நிலங்களை பறிக்கக் கூடாது என வலியுறுத்தி ஒவ்வொரு கிராமங்களை சேர்ந்த மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் அச்சத்தை போக்கி, பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே இருந்து வருகிறது.

இதைப்பற்றி மேட்டு பரந்தூர் துணைத்தலைவர் ராமதாஸ் கூறும்போது, விமான நிலையம் அமையவுள்ள 12 கிராமங்களும் நன்செய் நிலங்கள் நிறைந்த விவசாய பூமியாகும். விவசாயமே மூலத் தொழிலாகவும், முதன்மைத் தொழிலாகவும் உயிர் மூச்சாகவும் கொண்டு வாழும் விவசாய பெருங்குடி மக்கள் வாழும் பகுதியாக மேற்கண்ட கிராமங்கள் விளங்குகிறது.

இந்தப் பகுதிகளில் பல ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பல நீரோடைகள் கொண்ட பகுதியாகவும் திகழ்கிறது. இப்படிப்பட்ட பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைப்பது பரம்பரையாய் வேளாண்மை தொழில் செய்யும் விவசாயிகளின் உயிர் மூச்சை நிறுத்தும் செயலாக அமையும், என வேதனையுடன் தெரிவித்தார்.

விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் எடுப்பதை கண்டித்து மேட்டு பரந்தூர் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி, கொசப்பட்டு தெரு வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.

காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவர்களை மடக்கி வந்த வழியே திரும்பி போக அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து ஊர்வலமாக வந்த மக்கள். அருகே உள்ள மைதானத்தில் அமர்ந்து விவசாயத்தை அழிக்கும் விமான நிலையம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என கோஷமிட்டவாறு தங்கள் போராட்டங்கள் தொடர்ந்தனர்.

காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று கருப்பு கொடி ஏந்திய போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் திரும்பி சென்றனர்.

Views: - 169

0

0