‘அடியாத மாடு படியாது’ ; ஆசிரியருக்கு பிரம்பு வாங்கிக் கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்த புதுமையான பெற்றோர்!!

Author: Babu Lakshmanan
28 January 2023, 1:48 pm
Quick Share

பள்ளி தலைமையாசிரியருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்த பெற்றோரின் புதுமையான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மதுரை மாநகர் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன். இவரது மனைவி தமிழரசி. இந்த பெற்றோர் தங்களது 4 வயது மகன் சக்தியை செல்லூர் பகுதியிலுள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி வகுப்பில் புதிதாக சேர்த்தனர்.

அப்போது, பள்ளித் தலைமையாசிரியர் பால் ஜெயக்குமாருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வழங்கியதோடு, தங்கள் மகன் தவறு செய்தால் இந்தப் பிரம்பால் தாங்கள் தங்களை பிள்ளையைத் தண்டிக்கலாம் என்ற உறுதிமொழி மனுவையும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சங்கரபாண்டியன், தமிழரசி ஆகியோர் கூறுகையில், தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பு கொண்டு அடித்துத் திருத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நல்ல மாணவர்களாக மனிதர்களாக சிறந்து விளங்குவார்கள். ‘அடியாத மாடு படியாது’ என்று ஒரு பழமொழி நம்மிடையே புழக்கத்தில் உண்டு.

அதனை மனதிற்கொண்டுதான் எங்கள் பையனை எல்கேஜி-யில் சேர்க்கும்போது தலைமையாசிரியருக்க பிரம்பை பரிசளித்ததுடன், தவறு செய்தால் அவனைத் தண்டிக்க தயங்கக்கூடாது என்ற உறுதிமொழி மனுவையும் நாங்கள் வழங்கியுள்ளோம்’ என்றனர்.

Views: - 525

0

0