சாதி மறுப்பு திருமணம் செய்த போது பெண்ணை பிரித்து சென்ற பெற்றோர்.. Roundup செய்த போலீசார்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 October 2021, 10:59 am
Nagai Lovers Marriage Prob -Updatenews360
Quick Share

நாகை : சார்பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து போடும் போது சினிமா பாணியில் திருமணம் செய்த பெண்ணை தூக்கிய பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி-ரேவதி தம்பதியரின் மகன் மதன் (வயது 23). இவரும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் எலிட் நகரை சேர்ந்த மதியழகன் மகள் பாரதியும் (வயது 22) திருச்சியில் உள்ள ஜிபிஎன் தனியார் மருத்துவமனையில் நர்சிங் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்களின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என முடிவெடுத்த மதனும், பாரதியும் வீட்டிற்கு தெரியாமல் திருச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கடந்த 9ஆம் தேதி வந்துள்ளனர்.

பின்னர் நாகையில் உள்ள கோவிலில் பாரதிக்கு தாலிகட்டிய மதன் அவரை முறைப்படி பதிவு திருமணம் செய்வதற்காக நாகையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்தார்.

இதனிடையே பெண்ணை காணாத பாரதியின் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்து விசாரிக்க துவங்கியுள்ளனர். பணிபுரிந்த இடத்திலிருந்து அவர் நாகைக்கு சென்றுள்ளது அவர்களுக்கு தெரிய வரவே அவர்களும் 5 பேர் கொண்ட கும்பலுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு பாரதியும் மதனும் மாலையும் கழுத்துமாக ரிஜிஸ்டர் புத்தகத்தில் கையெழுத்து இட முயன்ற போது அந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ரிஜிஸ்டர் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் மதனின் பெற்றோரையும் அவர்களது உறவினர்களையும் அங்கிருந்து மிரட்டி கீழே தள்ளி விட்டு சினிமா பட பாணியில் பெண்ணை தரதரவென இழுத்து சென்றனர்.

பின்னர் நாகை நீதிமன்ற வளாகத்தின் முன்பு அவர்கள் கொண்டு வந்த காரில் பாரதியை ஏற்ற முயன்றனர். அப்போது அந்தப் பெண் என்னை காப்பாற்றுங்கள் என கூச்சலிடவே நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அந்த காரை தடுத்து நிறுத்தி மடக்கிப் பிடித்தனர்.

அப்போது பெண்ணை அங்கிருந்து மீட்டு செல்ல முயன்ற பெண்ணின் பெற்றோர், தாய்மாமன் உள்ளிட்ட உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண்ணை கீழே இறக்கி விடும்படி பொதுமக்கள் கூறினர்.

பொதுமக்களின் பேச்சை சட்டை செய்யாத பெண்ணின் உறவினர்கள் வலுக்கட்டாயமாக காரில் உள்ளே அந்த பெண்ணை இழுத்து சென்று அங்கிருந்து காரை நகர்த்த முயன்றனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசார் இந்த பரபரப்பு காட்சிகளை கண்டு உடனடியாக அங்கு வந்து காரில் இருந்தவர்களை சுற்றி வளைத்து அந்த பெண்ணை அவர்களிடம் இருந்து மீட்டனர்.

அப்போது அந்த காரில் இருந்த பெண்ணின் உறவினர்கள் நீதிமன்றம் என்றும் பாராமல், பாரதியை காரில் இருந்து இறங்க விடாமல் தடுத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நான் யார் தெரியுமா நான் வி.ஏ.ஓ கிராம நிர்வாக அலுவலர் என்றும் மிரட்டத் தொடங்கினார்.

அப்போது அந்தப் பெண் கதறி அழுது தன்னை காப்பாற்றுங்கள் என கூறவே, பெண்ணை அவர்களிடம் இருந்து போராடி மீட்ட போலீசார் அவரை நாகை நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடந்ததால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது.
மேலும் பெண்ணை போலீசார் மீட்டு செல்லும் பொழுதும் பெண்ணின் உறவினர்கள் காரை மறித்த பொதுமக்களையும் போலீசாரையும் திட்டி தீர்த்ததுடன் மூர்க்கமாகவும் நடந்து கொண்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இதனிடையே பெண்ணை திருமணம் செய்த மதனும் அவரது பெற்றோரும் நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து அங்கு தங்களுக்கு நேர்ந்தது சாதிமறுப்பு கொடுமை என கூறி பெண்ணை மீட்டு தாருங்கள் என புகார் மனு கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச்சேர்ந்த பாரதியிடமும், நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த மதனிடமும் முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 508

0

0