6 மாதங்களுக்கு பிறகு தனியார் ஆம்னி பேருந்து சேவை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி…!!

Author: Aarthi
16 October 2020, 9:27 am
omni bus - updatenews360
Quick Share

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தனியார் பேருந்து சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் முதல் பொது போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை முழுவதும் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு பேருந்து சேவை வழக்கம் போலவே தொடங்கப்பட்டது. அதேசமயம் ஓரளவு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் ஆம்னி பேருந்துகள் மட்டும் இயக்கப்படாமல் இருந்து வந்தன.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் சாலைவரி ரத்து செய்வது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணி முதலே ஆம்னி பேருந்துகள் இயங்க தொடங்கின. கொரோனா காரணமாக 6 மாதங்களாக ஓடாமல் இருந்த ஆம்னி பேருந்துகள் புறப்பட தொடங்கியதால் பஸ் உரிமையாளர்களும், தொழிலாளர்களும், பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் 500 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பயணிகளின் வருகையை பொறுத்து சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுடன் வழக்கமான கட்டணத்துடன் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 மாதத்துக்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 72

0

0