சர்ச்சை பேச்சில் சிக்கிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா : பலத்த பாதுகாப்புடன் குமரிக்கு அழைத்து சென்ற போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2021, 12:00 pm
Priest Kumari -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : இந்துக் கடவுள்கள் மற்றும் பாரதப் பிரதமரை இழிவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கன்னியாகுமரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்து கடவுள்கள், பாரத பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இழிவாக பேசியது தொடர்பாக கன்னியாகுமரி காவல்துறையினர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

தலைமறைவாகி இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இன்று அதிகாலை சொகுசு காரில் சென்னைக்கு தப்பிச் செல்வதாக மதுரை மாவட்ட எஸ்.பி பாஸ்கரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சொகுசு காரின் பதிவு எண்ணை கொண்டு அந்த காரை பின்தொடர்ந்து நிறுத்த முயற்சித்தபோது சொகுசு கார் நிற்காமல் விரைவாக சென்றுள்ளது.

கருப்பாயூரணி அருகே நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்ற ஜார்ச் பொன்னையா பயணித்த சொகுசு காரை சிலைமான் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மடக்கி நிறுத்தியதுடன் அவரையும் கைது செய்து உள்ளார்.

பின்னர் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின் பெயரில் மதுரை மாவட்ட எல்லையில் உள்ள கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் நேரில் வந்து கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பொன்னையாவை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

பாதுகாப்பிற்காக மதுரை மாவட்ட காவல் துறையினரும் உடன் சென்றனர். இந்த நிலையில் ஜார்ஜ் பொன்னையாவை கன்னியாகுமரி அழைத்துச் செல்வதற்காக கன்னியாகுமரி காவல்துறையினரும் மதுரைக்கு வந்தனர்.

தொடர்ந்து இங்கிருந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், பாதிரியாரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை சிலைமான் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோருடன் கோவில்பட்டிக்கு அழைத்துச்சென்றனர்.

Views: - 388

0

0