திமுக – காங்கிரஸ் உறவை முறிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் முயற்சி : கே.எஸ் அழகிரி பகிரங்க குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 6:21 pm
KS Azhaigir Stalin - Updatenews360
Quick Share

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தி.மு.க, காங்கிரஸ் உறவை முறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்து மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசினார். முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி, சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்குகிறார். அன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்துதவற்காக இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது.

ராகுல் காந்தி நடைபயணத்தால் மக்களின் மனநிலை மாற்றத்துடன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நிதி அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு விரைவில் அமலாக்கத்துறை செல்லும் என்று கூறி இருந்தார். எதைவைத்து அவர் இப்படி கூறினார்? என்று தெரியவில்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் நாங்கள் அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுவது தவறானது. பொதுக்கூட்டத்திற்கு தோழமை கட்சிகள் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. ஏனென்றால் இது காங்கிரஸ் கட்சி கூட்டம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் எப்படியாவது? தி.மு.க., காங்கிரஸ் உறவை முறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு காலமும் அவர்களுடைய அரசியலுக்கு நாங்கள் பலியாக மாட்டோம். தமிழகத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது.

Views: - 171

0

0