தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய பழங்குடி மக்கள்: கோவையில் விநோதம்..!

3 July 2021, 9:00 am
Quick Share

கோவை: பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரதுறை அதிகாரிகளை கண்டு தப்பி ஓடி கிராம மக்கள் மரத்தில் ஏறிக் கொண்டு சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது.

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மறுபுரம் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்காக மாநகர் மற்றும் ஊரக பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, கையிருப்பு உள்ள தடுப்பூசிகளை சுகாதாரத்துறையினர் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மலைகிராம பழங்குடி மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வராததால் மலைகிராமங்களுக்கே சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிட்டனர். இதற்கான தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலைகிராமத்திற்கு 500 தடுப்பூசிகளுடன் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சென்றனர்.

இவர்களை கண்ட கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிலர் தோட்டப் பகுதிகளுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். அங்கிருந்த இளைஞர்கள் மரத்தில் ஏறிக் கொண்டனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 600 வாக்காளர் உள்ள அந்த கிராமத்தில் வெரும் 57 பேரும், 90 பேர் இருந்த கிராமத்தில் வெறும் 7 நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் அந்த மக்களின் வீடுகளுக்கே சென்றதோடு, தடுப்பூசி செலுத்தி கொள்ள அழைப்பு விடுத்தனர்.

ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றால் நாங்களும் தடுப்பூசி செலுத்தி கொல்கிறோம் என்று பழங்குடியின கிராம மக்கள் கூறி சென்று விட்டனர். இதனால் எடுத்துச் சென்ற தடுப்பூசிகள் மீண்டும் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நகர பகுதிகளில் தடுப்பூசி செலுத்த மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், பழங்குடியின மக்கள் தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக்கொண்ட சம்பவம், தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் முழுமையாக சென்றடையவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

Views: - 149

0

0