எங்க விஏஓ-வ யாருக்கும் தரமாட்டோம் : கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல்!!
Author: kavin kumar15 December 2021, 6:38 pm
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கிராம நிர்வாக அலுவலர் மாற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் திம்மராசு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீர்காழி தாசில்தார் சண்முகம் பரிந்துரையின் பேரில் உதவி மாவட்ட ஆட்சியர் நாராயணன் கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுவை வேறொரு கிராமத்திற்கு பணி மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை அறிந்த வள்ளுவக்குடி கிராம பொதுமக்கள் கிராம கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் திம்மராசு பணி மாற்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும், வள்ளுவக்குடி கிராமத்திலேயே பணி வழங்க வேண்டும், மேலும் கிராம நிர்வாக அலுவலர் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாக சுவரொட்டி ஒட்டினர்.
இந்நிலையில் வள்ளுவக்குடி கடைவீதியில் கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுவை மீண்டும் வள்ளுவக்குடி கிராமத்தில் பணி அமர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மீது பொய் புகார் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் மேலும் இது தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடத்தி சுமூக தீர்வு எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் சிறிது நேரம் சீர்காழி- பனங்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
0
0