நீரில் மூழ்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த மக்கள் : மருத்துவர்கள் இல்லாததால் பலி.. சாலைமறியலால் பரபரப்பு!!
Author: kavin kumar4 November 2021, 5:16 pm
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் உயிரிழந்ததாக கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சதீஷ். இவர் இன்று காலை செம்பராம்பட்டுஏரி அருகே உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். உடனடியாக அவருடன் குளிக்க வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ் உயிரிழந்தார். இதையடுத்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை எனவும் உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால் சதிஷ்சை காப்பாற்றி இருக்க முடியும் என கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் மருத்துவமனையின்மனையின் முன் வாசல் கதவை இழுத்து மூடியும் மற்றும் மருத்துவமனையின் முன் சமார் 1 மணிநேரத்திற்க்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சங்கராபுரத்தில் இருந்து பூட்டை செல்லும் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
0
0