பிரதமர் மோடி படம் அழிப்பு… தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர் கைது : தமிழக முதலமைச்சருக்கு நன்றி கூறிய பாஜக பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 7:51 pm
Modi Black Ink - Updatenews360
Quick Share

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனிடையே இன்று காலை செஸ் ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்திடும் வகையில் தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர். மேலும் செஸ் விளம்பரத்தில் மோடி படத்தை ஒட்ட வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மை பூசி அழித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து பிரதமர் மோடி படத்தை அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் சேர்ந்த சசிக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார், பிரதமர் படத்தின் மீது மை ஊற்றிய தேசவிரோதியை கைது. தமிழக முதலமைச்சருக்கு நன்றி, வணக்கம் மோடி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Views: - 468

0

0