போன் செய்தால் போதும்…வீட்டுக்கே வரும் பெட்ரோல்: தமிழகத்தில் முதல்முறையாக தேனியில் அறிமுகம்..!!

Author: Aarthi Sivakumar
10 August 2021, 3:49 pm
Quick Share

தேனி: உத்தமபாளையம் அருகே போன் செய்தால் வீடு தேடி பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் முறை தமிழகத்திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அதிகளவு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக டிராக்டர் மற்றும் மண் அள்ளும் எந்திரம் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. பணியின்போது எந்திரங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் வேலை பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்று பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிவரவேண்டிய நிலை ஏற்படும்.

இதேபோல திருமண மண்டபம், மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் ஜெனரேட்டர் இயக்கமுடியாத சூழல் ஏற்படும். கிராமச்சாலைகளில் பெட்ரோல் பங்கிற்கு வந்து எரிபொருள் வாங்கிசெல்வது சவாலான காரியமாக இருந்து வருகிறது. மேலும் கேன்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச்செல்லவும் போலீசார் தடைவிதித்துள்ளனர்.

இதனை தவிர்க்க தேனி மாவட்டம் கோம்பையில் கேன்கள் மூலம் பெட்ரோல், டீசலை நேரடியாக வினியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பண்ணைப்புரம் சாலையில் உள்ள பாரத் பெட்ரோலியம் பங்கில் தமிழகத்திலேயே முதன்முறையாக இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜெர்ரிகேன் என்னும் தனித்துவமான கேனை இதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கீழே விழுந்தாலும் வாகனம் இதன்மீது ஏறினாலும் உடையாத வலுவான ஸ்டீல் இழைகளின் பிணைப்பால் இந்த கேன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 மணிநேரமும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பங்க் உரிமையாளர் முகைதீன்அப்துல்காதர் தெரிவிக்கையில்,

கிராமப்புறங்களில் வயல்களில் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டம் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்தது 20 லிட்டர் கேனில் எரிபொருள் வழங்குகிறோம். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. 10 கி.மீ வரை கொண்டு செல்வதற்கு பெட்ரோல் பங்கில் விற்பனைசெய்யும் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேல் இருந்தால் ரூ.50 சேவைக்கட்டணம் வசூலிக்கிறோம் என்றார்.

Views: - 280

0

0