பள்ளி மாணவனின் உயிரை காக்க உதவிய மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள்: பொதுமக்கள் பாராட்டு

Author: Udhayakumar Raman
1 July 2021, 8:31 pm
Quick Share

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே பேஸ் மேக்கர் கருவி பொருத்த உதவிய மருத்துவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவன் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சித்தேரி எனும் குக்கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்யும் தனவேல் என்பவரது மகன் அமுதன்(15). அமுதன் 6ஆம் வகுப்பு முதல் தற்போது (10 ஆம் வகுப்பு ) வரை தனது கிராமத்தின் அருகிலுள்ள காரணை கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறான். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து RSBK திட்டத்தின் கீழ் 2019 ஆண்டு பள்ளிக்கே சென்று மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தும் போது, இந்த குறிப்பிட்ட மாணவனுக்கு (இருதயம் துடிப்பு வழக்கத்தை விட குறைவாக இருப்பது.) இருதயத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த மாணவனுக்கு முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், அரசு மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தபோது, மாணவனுக்கு இருதய துடிப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதும் அதனால் அந்த மாணவருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்ட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். போன ஆண்டு கொரோனா நோய் தொற்றின் காரணமாக அந்த சிறுவனுக்கு மருத்துவம் பார்ப்பதில் பல்வேறு பிரச்சனைகள் நிலவியது. இந்நிலையில், முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் விடா முயற்சியின் காரணமாகவும், சிறுவன் படித்து வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சிறுவனின் வகுப்பாசிரியரின் ஒத்துழைப்போடும்,

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையில், இருதய இருதய துடிப்பை சீராக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டு மாணவன் நலமுடன் திரும்பினான். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாணவன் மற்றும் அவரது பெற்றோர் செல்லவும், அங்கு அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் உணவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கும், வீடு திரும்பவும் இந்த மிகப் பெரிய கொரோனா பேரிடரிலும் முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் உதவியதை அடுத்து அந்த மாணவன் நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், தனது உடல் நலனில் அக்கறை கொண்டு உதவிய மருத்துவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று நன்றி தெரிவித்தான்.

Views: - 129

0

0