“தீரன்“ பட பாணியில் கொள்ளை நடத்த திட்டம் : வீடுகளில் குறியீடு… அச்சத்தில் நெல்லை!!
7 September 2020, 5:50 pmநெல்லை : எந்த வீட்டில் திருடலாம், எந்த வீட்டில் ஒன்ணும் தேறாது என்பதை குறிக்கும் வகையில் வீடுகளில் உள்ள கேட்டுகளில் பிரெஞ்சு மொழியில் குறியீடுகள் உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் சில குறியீடுகளை வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்று. ஏற்கனவே குறியீடுகள் வைத்து வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன.
தற்போது நெல்லையில் எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம், எந்த வீட்டில் ஒண்ணும் தேறாது என்று திருடுவதற்காக ஒரு குழுவினர் நோட்டமிட்டு அந்த வீட்டின் வாசலிலோ, கேட்டிலோ ஒரு குறியீடு வைத்துள்ளனர். அவர்கள் வியாபாரிகள் போலவும், விலாசம் கேட்பது போலவும் வீடுகளை நோட்டமிடுவது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நெல்லையில் வி.எம்.சத்திரம் மற்றும் ஆரோக்யபுரம் பகுதியில் வீடுகளில் உள்ள கேட்டுகளில் குறியீடுகள் இருந்ததை மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது, அந்த குறியீடுகள் பிரெஞ்சு மொழியில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் 8 குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டுபிடித்த போலீசார், ஞாயிறு அதிகாலை திருடுவதற்கு திட்டம் என்ற அந்த குறியீடுகள் குறிப்பிடுவதாக தெரியவந்துள்ளது. இந்த குறியீடுகள் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குறியீடுகள் வைத்து திருடுவதற்கு ஏதுவாக பயன்படுத்தபட்டுள்ளன.
இந்த வீட்டில் அலாரம் உள்ளது, இந்த வீட்டில் ஒன்றும் தேறாது, இந்த வீட்டில் நாம் ஏற்கனவே திருடிவிட்டோம், வயதானவர்கள் உள்ளனர் என அர்த்தங்களை கொண்ட குறியீடுகள் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து போலீசார் துருவி துருவி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0