விலை உயர்ந்த செல்போன் வாங்க சிறுவனை கடத்தி நாடகம் : இளைஞரை வளைத்த போலீசார்!!

Author: Udhayakumar Raman
4 December 2021, 7:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் விலை உயர்ந்த செல்போன் வாங்க சிறுவனை கடத்தி நாடகத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். விவசாயியான இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். அன்பழகனின் எதிர்வீட்டில் வசித்து வருபவர் உதயன். இவர் புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். எதிர்வீட்டில் வசிப்பதால் அன்பழகனின் 6 வயது மகனை அடிக்கடி வெளியே அழைத்து செல்வது வழக்கம். அதுபோல், வெள்ளிக்கிழமை அன்பழகனின் குழந்தையை உதய பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் திருக்கனூர் காவல் நிலையத்திற்கு சட்டை கிழிந்தபடி பதறி போய் உதயன் வந்து, திருக்கனூர் அய்யனார் கோயில் எதிரே பைக்கில் சென்றபோது,

மர்ம நபர்கள் குழந்தையை என்னிடம் இருந்து கடத்திச் சென்று விட்டதாகவும், ஒரு லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வளர் வேலு தலைமையிலானா போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினர். குழந்தை கடத்தப்பட்டதாக கூறிய இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அதில் சிறுவனை உதய பல்வேறு கடைகளுக்கு அழைத்து சென்றது பதிவாகி இருந்தது. அதனால் உதயன் மீது சந்தேகமடைந்த போலீசார், உதயனின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டனர். அப்போது உதயனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் பேசி உள்ளார்.

அதில் ஏம்பா, குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டு போனாயே, ஏன் திரும்ப அழைத்து செல்லவில்லை? என கேட்டுள்ளார் . இதனை கேட்ட போலீசார் அந்த பெண்ணை குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது உதயன் சிறுவனை தன்னிடம் பார்த்து கொள்ளுமாறு கூறி சென்றதாக அந்த பெண் தெரிவிக்க, போலீசார் உதயனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர், அதில் திருக்கனூர் பகுதியில் செல்போன் கடையில் விலை உயர்ந்த செல்போனை பார்த்து, அதன் விலையை கேட்டு அதனை வாங்குவதற்காக சிறுவனை கடையாக நாடகம் ஆடியது தெரிய வந்தது. இதனை அடுத்து உதயனை கைது செய்த போலீசார், சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 272

0

0