இடஒதுக்கீட்டிற்காக 40 ஆண்டுகளாக போராடியும் நியாயம் கிடைக்கவில்லை : அன்புமணி ராமதாஸ்..!!

1 December 2020, 4:08 pm
anbumani ramadoss - updatenews360
Quick Share

சென்னை : வன்னியர்களின் இடஒதுக்கீட்டிற்காக 40 ஆண்டுகளாக போராடியும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட எல்லைகள் வழியாக சென்னை நோக்கி சென்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும், சென்னை புறநகர் ரயில்சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

முதலமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு கோரி முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ளனர். எந்த அமைப்புக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டம் இல்லை. அமைதியான வழியில் போராட்டத்தை முன்னெடுக்க பாமக தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். எங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 0

0

0