கோவை அருகே சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த காவலர் : வைரல் வீடியோ!!

24 January 2021, 7:44 pm
Police Chased - Updatenews360
Quick Share

கோவை : செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை அன்னூர் போலீசார் துரத்தி பிடித்து கைது செய்த காட்சிகள் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

பீகார் மாநிலம் யஷ்வந்த்பூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாகுமார். இவர் அன்னூர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது அவருடைய செல்போன் திடீரென மாயமானது. இதனையடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து பேருந்துக்காக காத்திருந்த மற்றொரு பயணியின் செல்போன் மாலையில் திருடப்பட்டது.

இதுகுறித்த தகவல் அன்னூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அன்னூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன் நுண்ணறிவு பிரிவு காவலர் கருணாகரன் ஆகியோர் இரவு 9 மணி அளவில் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த இருவரும் தப்பி ஓடினர்.

இதனையடுத்து காவலர் மணிகண்டன் தப்பியோடிய நபரை துரத்திச் சென்றார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்த நிலையிலும் தப்பி ஓடிய திருடனை காவலர் மணிகண்டன் பிடித்தார். மற்றொரு நபரையும் துரத்திப் பிடித்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், சேக்தாவூத் என்பதும் இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 8க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு தலைமறைவான குற்றவாளிகள் என தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்களையும், பறிமுதல் மறைத்து வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டில் ஆறுமுகம் சேகுதாவூத் ஈடுபடுவதும், காவலர் மணிகண்டன் கருணாகரன் ஆகியோர் அவர்களை விசாரணை செய்வதும், காவலர்களிடம் இருந்து செல்போன் திருடர்கள் தப்பி ஓடுவதும் அவர்களை காவலர்கள் மணிகண்டன் விரட்டிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது.

உரிய நேரத்தில் செல்போன் திருடனை கண்டுபிடித்த அன்னூர் காவல்துறையினருக்கு பொது மக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0